ஊரடங்கில் கோவில் உண்டியல் மாயம்
சேலம் மாநகரில் ஊரடங்கை பயன்படுத்தி கோவில் உண்டியலை திருடி சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணாநகர் பகுதியில் ஸ்ரீ கந்தாரி மீனாட்சி மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் பண்டிகை நடைபெறும் நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக பண்டிகை நடத்தப்படாமல் இருந்துள்ளது.
இதற்கிடையே தற்போது நோய் தடுப்பு நடவடிக்கையாக பக்தர்களுக்கு அனுமதி இல்லாமல் தினசரி பூஜைகள் மட்டுமே நடைபெற்று வருகிறது. வழக்கம்போல் கோவில் பூசாரி நேற்று மாலை பூஜைகளை முடித்து விட்டு 6 மணியளவில் கோயில் நடையை சாத்திவிட்டு சென்றுள்ளார்.
பின்னர் இன்று காலை கோவிலை திறந்த போது கோயில் உண்டியல்கள் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக உண்டியல் திறக்கப்படாமல் இருந்ததை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் ஊரடங்கை பயன்படுத்தி இன்று அதிகாலை கோவிலில் இருந்த 2 உண்டியலை தூக்கி சென்று 100 மீட்டர் தூரத்தில் உள்ள சாலையில் வைத்து உண்டியலிருந்த பணத்தை திருடி சென்றுள்ளது தெரியவந்தது.
இதையடுத்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.