மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு ஆசிட் வீசிய கணவனுக்கு வலை வீச்சு
ரேவதியின் கணவன் இயேசுதாஸ் தான் மறைத்து வைத்திருந்த ஆசிட் பாட்டிலை திறந்து ரேவதி மீது ஊற்றி விட்டு தப்பி ஓடினார்.
சேலம் குகை பகுதியை சேர்ந்த இயேசுதாஸ் ( 50) என்பவர் சுகாதார பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் நாமக்கல் மாவட்டம் வையப்பமலையை சேர்ந்த ரேவதி (47) என்பவருக்கும் கடந்த 20 வருடத்துக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இந்நிலையில் ரேவதிக்கும், இயேசுதாசுக்கு அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் மனைவியின் மீது சந்தேகப்பட்டு அடித்து அடித்து, உதைத்து சித்ரவதை செய்து வந்துள்ளார். இதனால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரேவதி அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
சேலத்தில் உள்ள வழக்கறிஞர் ஒருவர் மூலம் ரேவதி அவரது தாயாருடன் இன்று புகார் கொடுக்க வந்துவிட்டு, சேலம் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ரேவதி தனது கணவர் கொடுமை செய்வதாக ஏற்கனவே புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து இன்று காவல் நிலையத்தில், இருவரையும் அழைத்து விசாரணை நடத்தி நிலையில் மனைவி ரேவதி நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றுக் கொள்வதாக எழுதி கொடுத்துள்ளார். பின்னர் அதனை ஏற்க மறுத்து மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் எங்களை சேர்த்து வையுங்கள் என்றும் இயேசுதாஸ் வற்புறுத்தியுள்ளார். இருப்பினும் ரேவதி ஏற்கவில்லை. இதையடுத்து ரேவதியும் அவரது தாயாரும் பழைய பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்றுள்ளார்.
அப்போது பின்னால் வந்த ரேவதியின் கணவன் இயேசுதாஸ் தான் மறைத்து எடுத்து வந்திருந்த ஆசிட் பாட்டிலை திறந்து ஆசிட்டை மனைவி ரேவதி மீது ஊற்றி விட்டு தப்பி ஓடினார். ஆசிட் வீசியதால் ரேவதியின் முகம் மற்றும் மார்பு பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டது. இதனால் அலறி துடித்தார். இதைப்பார்த்த பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து ரேவதியை சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது ரேவதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சேலம் டவுன் போலீஸ் உதவி ஆணையர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர்.
ஆசிட் வீசப்பட்டதால் ரேவதியின் தயாருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை செய்தனர். இந்த சம்பவத்தை அறிந்த சேலம் மாநகர காவல் ஆணையர் நஜ்முல் ஹோடா தப்பியோடிய இயேசுதாசை கைது செய்ய தனிப்படை அமைத்து இயேசுதாஸை தேடி வருகின்றனர். சேலம் பழைய பேருந்து நிலையத்தில் பட்டப்பகலில் ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.