சேலத்தில் ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைந்து முடித்திட வேண்டும்: ஆணையர்
சேலத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாநகராட்சியில் சீர்மிகு திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும் அஸ்தம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட மாரியம்மன் கோவில் தெரு முதல் 220 மீ. நீளத்திற்கு பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.
வாசவி மஹால், முதல் அக்ரஹாரம் தெரு ஆற்றோரம் தெரு, திருமணி முத்தாறு அபிவிருத்தி பணிகள், சக்தி மாரியம்மன் பாவில் தெரு பகுதிகளில் சாலை அமைக்கும் பணி, ஆனந்தா பாலம் பல்லடுக்கு வாகன நிறுத்தம் இடத்தை மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து இந்தப் பணிகள் அனைத்தையும் விரைந்து முடித்திட வேண்டுமென சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்திரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து செவ்வாய்பேட்டை அப்புசெட்டி தெரு , கபிலர் தெரு ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் எவ்வாறு நடைபெற்று வருகிறது. இந்தப்பணிகள் எத்தனை நாட்களில் முடிவுபெறும் என அலுவலர்களிடம் கேட்டறிந்த ஆணையாளர்,
இரு சக்கர வாகனங்களில் செல்லும் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறுமின்றி, பாதாள சாக்கடை திட்டப் பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்திட வேண்டுமெனவும்,
கபிலர்தெரு முதல் வண்டிப்பேட்டை வரை 300 மீ. நீளத்திற்கு பாதாள சாக்கடை திட்டப் பணிகளை முடிக்க காலதாமதம் ஏற்படுவதை அறிந்த ஆணையாளர் அவர்கள், தற்போது ஒரு யூனிட் மட்டுமே பயன்படுத்தப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
3 யூனிட்டுகளை பயன்படுத்தி, வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் அனைத்தும் முடித்திட வேண்டுமென அலுவலர்களுக்கு உத்திரவிட்டார்.