வெளி மாநிலத்திற்கு கடத்த முயன்ற 12 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 3 பேர் கைது
சேலத்திலிருந்து வெளி மாநிலத்திற்கு கடத்த முயன்ற 12 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் இருந்து வெளி மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக மாநகர போலீஸ் துணை கமிஷனர் மோகன்ராஜுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அவரது உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் சீலநாயக்கன்பட்டி பகுதியில் சோதனை நடத்தினர்.
அப்போது ஒரு வேனில் இருந்து லாரிக்கு மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசியை மாற்றிக்கொண்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, அவர்கள் சேலம் தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்த தேவராஜ், விஜயகுமார், அஜித் என்பதும் வெளிமாநிலத்துக்கு ரேஷன் அரிசியை கடத்த முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்துடன் அவர்களிடம் இருந்து 12 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு லாரி, இரண்டு வேன், ஒரு இரு சக்கர வாகனம் ஆகியவையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை சேலம் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக தலைமறைவாக உள்ள கோபி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.