சேலம் நள்ளிரவு தாக்குதல் சம்பவம்: கைது செய்யக்கோரி சாலைமறியல்
சேலத்தில் கொலைவெறி தாக்குதல் நடத்திய கும்பலை உடனடியாக கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
சேலம் கிச்சிப்பாளையம் பாரதி நகர் பகுதியில் நேற்றிரவு திடீரென பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் நான்கு இளைஞர்களை ஓட ஓட விரட்டி கத்தி வீச்சரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சராமரியாக வெட்டி தப்பிச்சென்றது.
இந்த கொலை வெறி தாக்குதலில் பலத்த காயமடைந்த வினோத், மணிகண்டன், பிரதாப் மற்றும் 17 வயது சிறுவன் உதயகுமார் ஆகியோர் பலத்த காயங்களோடு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் வினோத்(25) சிகிச்சை பலனின்றி அதிகாலை உயிரிழந்தார். மற்ற மூவருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இளைஞர்களை வெட்டிவிட்டு தலைமறைவான கும்பலை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் 15க்கும் மேற்பட்டோர் சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக காவல்துறையினர் அவர்களை அப்புறப்படுத்தினர்.
தொடர்ந்து இதுபோன்ற அராஜகத்தில் ஈடுபடும் கும்பலைச் சேர்ந்த அனைவரையும் கைது செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். கிச்சிப்பாளையம் பகுதியில் இதுபோன்ற முன்விரோத தாக்குதல் மற்றும் உயிரிழப்புகள் பல ஆண்டு காலமாக தொடர்கதையாகவே உள்ளது.
ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் பிரபல ரவுடி செல்லதுரை படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, செல்லதுரையின் ஆதரவாளர்கள் மீது இந்த தாக்குதல் நடந்துள்ளது. எனவே, அந்த கொலையில் தொடர்புடைய நபர்களின் ஆதரவாளர்களே மீண்டும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் நேற்றிரவு நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக ஆயுதங்கள் சிலவற்றை கிச்சிப்பாளையம் போலீசார் கைப்பற்றினர். இதனிடையே, சங்ககிரி பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றுகொண்டிருந்த சதாம் உசேன், விஜி, சஞ்சய், கமல், நந்தகுமார், மாதவன் ஆகிய ஆறு பேரை சங்ககிரி டி.எஸ்.பி. நல்லசிவம் தலமையிலான காவல் துறையினர் பிடித்து கிச்சிபாளையம் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அவர்களிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் அதிமுக முன்னாள் கவுன்சிலர் மேகலாவின் கணவர் பழனிச்சாமி உட்பட 4 பேரை கிச்சிபாளையம் போலீசார் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.