பொதுத்துறை சொத்துக்களை தனியார் மயமாக்குவதா? தொழிலாளர்கள் தர்ணா
சேலத்தில், பொதுத்துறை சொத்துக்களை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் செயலை கண்டித்து தொழிலாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
இந்தியாவில் பொதுத்துறை சொத்துக்களை மத்திய அரசு தனியார்மயமாக்கும் செயலை கண்டித்து நாடு தழுவிய அளவில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சேலம் தலைமை தபால் நிலையம் முன்பாக, அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் சார்பாக, நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தலைமை தபால் நிலையம் முன்பாக உள்ள சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ரயில்வே, வங்கி, தொலைதொடர்பு துறை, பொதுப்பணித்துறை சொத்துக்களை, திட்டமிட்டு மத்திய அரசு தனியார் மயமாக்குவதாக குற்றம்சாட்டினர். தமிழகத்திற்கு தடையின்றி தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்கள் எழுப்பினர்.