நட்சத்திர ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்; முன்னாள் விமானப்படை ஊழியர் கைது

நட்சத்திர ஹோட்டல்களுக்கு செல்போனில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த முன்னாள் விமானப்படை ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-08-10 12:00 GMT

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பிரேம்ராஜ் நாயர்.

சேலம் மாநகரில் உள்ள இரண்டு பிரபல நட்சத்திர ஹோட்டல்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு இ-மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்ததில் அது வெறும் புரளி என்பது தெரியவந்தது.

இதனையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து சேலம் மாநகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் கேரள மாநில ஆளுநர் மாளிகை, கேரளா தலைமைச்செயலகம், கேரள காவல்துறை தலைவர் அலுவலகம் மற்றும் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்களுக்கு செல்போன் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், இந்த செல்போன் சேலத்தில் இருந்து இயக்கப்பட்டு உள்ளதாகவும் சேலம் மாநகர காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனைத்தொடர்ந்து சேலம் மாநகர காவல்துறை ஆணையாளர் நஜ்மல் ஹோடா உத்தரவின் பேரில் சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த செல்போன் சேலம் அருகே உள்ள சித்தனூர் கிராமத்தில் டீக்கடை வைத்திருக்கும் ராணி என்பவருக்கு சொந்தமானது என்றும், இந்த செல்போன் கடந்த சில தினங்களுக்கு முன் காணாமல் போனது தெரியவந்தது.

இதனை அடுத்து செல்போனை திருடி வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் அந்த செல்போனுக்கு சேலம் ஜங்சன் பகுதியில் ரீசார்ஜ் செய்யப்பட்டது தெரிய வந்ததை அடுத்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து செல்போனின் நடவடிக்கை குறித்து தீவிர கண்காணிப்பில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.

காவல்துறையினரின் தீவிர கண்காணிப்பில் இந்த செல்போனை பயன்படுத்தி வந்த பிரேம்ராஜ் நாயர் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்ட பிரேம்ராஜ் நாயர் கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் என்றும், இவர் இந்திய விமானப் படையில் மருத்துவ உதவியாளராக பணிபுரிந்து வந்தவர் என்பதும்  தெரியவந்தது.

பணியில் இருந்து விலகிய அவர், தொழில் செய்து வந்ததில் நஷ்டம் ஏற்பட்டதால் இது போன்று நட்சத்திர ஓட்டல்கள், நகைக் கடைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருகிறார் என்பதும்,  உயர் அதிகாரிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகவும் தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து, அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். கேரள காவல்துறையினரும் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

கேரளாவில் உள்ள முக்கிய உயர் அதிகாரிகளின் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் சேலத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News