சேலத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்த அனுமதி அளிக்க வேண்டும், மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை
சேலத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று மண்பாண்ட தொழிலாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் விநாயகர் சிலை தயாரிப்பு மற்றும் விற்பனையாளர்கள் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய் தொற்று அதிகம் இருப்பதன் காரணமாக பண்டிகை கொண்டாட முடியாத காரணத்தினால் தொழிலாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி விநாயகர் சதுர்த்தி விழா நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்பாண்டம் மற்றும் விநாயகர் சிலை தயாரித்து விற்பனை செய்யும் தொழிலாளர்கள் கைகளில் விநாயகர் சிலையுடன் வந்து கோரிக்கை மனு அளித்தனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி நடத்த அனுமதி அளிக்காததால் சேலம் மாவட்டத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான 1.5 லட்சம் சிலைகள் தேக்கமடைந்துள்ளதால் தொழிலாளர்கள் பெரும் இழப்பை சந்தித்து வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருவதாக வேதனை தெரிவித்தனர்.
மேலும் விநாயகர் சிலை தயாரிப்பதற்கு இலவசமாக களிமண் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் ரசாயனம் கொண்டு தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.