சேலத்தில் இ சேவை மையத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் நேரில் ஆய்வு

சேலத்தில், இ சேவை மையத்தினை தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2021-07-22 11:45 GMT

சேலத்தில், வட்டாட்சியர் அலுவலகத்தில்இ சேவை மையத்தை,  தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் இ- சேவை மையத்தை, மாநில தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இ சேவை மையங்களில் பொது மக்களுக்கு அளிக்கப்படும் சேவைகள் குறித்து கேட்டறிந்த அவர், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது எவ்வளவு நேரத்தில் தீர்வு காணப்படுகிறது என்பது குறித்தும் ஆய்வு செய்தார்.

பின்னர், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இதனையடுத்து  இலவச ஆதார் சேவை மையம் மற்றும் அரசு கேபிள் டிவி நிறுவனம் ஆகிய இடங்களையும் அமைச்சர் பார்வையிட்டார். சேலத்தில் இரண்டாம் கட்டமாக தகவல் தொழில்நுட்பப் பூங்கா தொடங்குவதற்கான இடம் குறித்து ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மனோ தங்கராஜ், சேலம் அம்மாபேட்டை பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக மூடப்பட்டு இருக்கும் கூட்டுறவு நூற்பாலை இருக்கும் இடத்தை பார்வையிட்டார். அந்த வளாகத்தில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, அமைச்சக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதனையடுத்து, சேலம் மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் செய்யப்பட்டு வரும் இ-சேவை மைய பணிகளை பார்வையிட்ட அமைச்சர் மனோ தங்கராஜ்,  சேலம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் இயங்கி வரும் சேலம் தகவல் தொழில்நுட்ப பூங்கா கூட்ட அரங்கில், தனியார் மென்பொருள் நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சேலத்தில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா வளாகத்தில், மேலும் புதிய மென்பொருள் நிறுவனங்களை அமைப்பது தொடர்பாகவும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது தொடர்பாக அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார். 

Tags:    

Similar News