சேலம் மாவட்டத்தில் இனி சந்தைகள் செயல்படாது..

சேலம் மாவட்டத்தில் இனி உழவர் சந்தைகள் உள்பட எந்த சந்தைகளும் செயல்படாது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

Update: 2021-05-19 16:00 GMT

சேலம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுபடுத்த அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக முழு ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கவும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் சேலம் மாவட்டத்தை பல்வேறு மண்டலங்களாக பிரித்து நோய் தடுப்பு பணிகளை மேற்கொள்வது தொடர்பாக அரசு அலுவலர்களுடன் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வில் ஈடுபட்டார்.

 அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செந்தில்பாலாஜி சேலம் மாவட்டத்தில் முழு ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கவும், நோய்த் தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் மாவட்டம் முழுவதும் 177 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு இரவு பகல் என 354 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் காய்கறிகளை வாங்குவதற்காக சந்தைகளில் கூடும் கூட்டத்தை தவிர்க்க மாவட்டம் முழுவதும் வீடு வீடாக நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் இனிமேல் உழவர் சந்தைகள் உட்பட எவ்வித சந்தைகளும் செயல்படாது என தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து ஓட்டல்களில் தற்போது வழங்கப்பட்டு வரும் பார்சல் சேவை டோர் டெலிவரி மட்டும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

அரசு சார்பில் இரும்பாலையில் 500 படுக்கை வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்டு வரும் தற்காலிக சிகிச்சை மய்யத்திற்கு சில தனியார் அமைப்புகள் சமூக வலைத்தளங்களில் நன்கொடை கேட்டு  வீடியோ பரப்பி வருவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு மட்டுமே தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளதாகவும், இதுபோல் நன்கொடை வசூலிக்க அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவித்த அவர், அரசு அனுமதியின்றி நன்கொடை வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

Similar News