சேலம் மாநகரில் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை: வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்

சேலம் மாநகரில் நேற்று இரவு முழுவதும் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழையால் வீடுகளில் தண்ணீர் புகுந்தது.

Update: 2021-09-03 05:15 GMT

வீடுகளுக்குள் புகுந்த நீர்.

சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு தொடங்கிய மழை, பலத்த மழையாக மாற தொடங்கியது. சேலம் சூரமங்கலம் அஸ்தம்பட்டி, 5 ரோடு, கொண்டலாம்பட்டி, சீலநாயக்கன்பட்டி, வீராணம், வீரபாண்டி, சீரகாபாடி, வாழப்பாடி, ஏற்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

குறிப்பாக சேலம் மாநகர் அம்மாபேட்டை நாராயண நகர், சித்தேஸ்வரா நகர், களரம்பட்டி, கிச்சிபாளையம் போன்ற பல்வேறு பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து சாலைகளில் வெள்ளம் தேங்கி நிற்கிறது. மாநகராட்சி பகுதியில் ஆங்காங்கே பாதாள சாக்கடை கால்வாய் வெட்டப்பட்டு உள்ளதால் மழைநீர் எளிதாக வெளியேறாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது.

மேலும் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் விடிய விடிய தூங்காமல் தவித்து வருகின்றனர்.  இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் மழை நீரானது குளம்போல் தேங்கி நிற்கின்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News