சேலத்தில் நள்ளிரவில் பெய்த கனமழை- மழைநீரால் குளமானது காந்தி மைதானம்
சேலத்தில் நள்ளிரவில் பெய்த கனமழை கொட்டித் தீர்த்தது; இதனால், சாலைகளில் பெருக்கெடுத்த மழைநீர் ஓடியது.;
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மாலை நேரத்தில் பெய்யும் மழையின் காரணமாக குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது.
இதேபோல், நேற்றிரவு சேலம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் லேசான மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்லச்செல்ல நள்ளிரவில், பலத்த கன மழையாக மாறியது. சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக இடைவிடாது பெய்த மழையால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
சேலம் சூரமங்கலம், ஜங்ஷன், அஸ்தம்பட்டி, ஐந்து ரோடு, புதிய பஸ் நிலையம், அம்மாபேட்டை, சீலநாயக்கன்பட்டி, கொண்டலாம்பட்டி, உள்ளிட்ட மாநகரில் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்துள்ளது. சேலம் காந்தி விளையாட்டு மைதானம் முழுவதும் மழைநீர் தேங்கி இருந்த காரணத்தால் விளையாட்டு வீரர்கள் தண்ணீருக்கு மத்தியில் பயிற்சி செய்தனர்.
இதேபோல், சேலம் கிச்சிப்பாளையம் நாராயணநகர் பச்சப்பட்டி உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதனால், அப்பகுதியில் உள்ள மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.