சேலத்தில் காகித மறுசுழற்சி ஆலையில் தீ விபத்து, பல லட்சம் மதிப்பில் சேதம்
சேலத்தில் காகித மறுசுழற்சி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பில் சேதம் ஏற்பட்டது.
சேலம் பெரமனூர் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவருக்கு சொந்தமான காகித மறுசுழற்சி ஆலை சன்னியாசிகுண்டு பகுதியில் செயல்பட்டு வருகிறது.
இந்த ஆலையில் மூன்று ஷிப்ட் அடிப்படையில் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு திடீரென ஆலை வளாகத்தில் உள்ள திறந்தவெளி கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பழைய காகித தொகுப்பில் தீப்பற்றி எரிவதைக் கண்ட ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இந்த தகவலின் பேரில் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
எளிதில் தீப்பற்றக்கூடிய காகித தொகுப்பு மலை போல் அடைத்து வைக்கப்பட்டிருந்ததால் அடுத்த சிறிது நேரத்தில் தீ மளமளவென பற்றி எரிந்தது. இதையடுத்து 3 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் துறைக்குச் சொந்தமான டேங்கர் லாரிகளில் தண்ணீர் எடுத்து வரப்பட்டு தீயை அணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
தீயணைப்புத் துறையினர் இரவு முழுவதும் போராடிய போதும் கட்டுக்கடங்காமல் இருந்து தீயினால் சுமார் 10,000 சதுர அடி பரப்பளவில் வைக்கப்பட்டிருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான பழைய காகித தொகுப்புகள் தீயில் எரிந்து சாம்பலாகின.
அருகாமையில் குடியிருப்புகள் இல்லாத ஒதுக்குப்புறமான பகுதி என்பதால் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படவில்லை. திறந்தவெளி கிடங்கு என்பதால் ஏதேனும் நெருப்புப் பொறிகள் பட்டு தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த தீ விபத்து குறித்து கிச்சிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.