புரட்டாசி சனிக்கிழமை: பெருமாள் கோயில்களில் முன்பு பக்தர்கள் வழிபாடு
புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு, சேலத்தில் உள்ள பெருமாள் கோயில்கள் முன்பாக நின்று பக்தர்கள் வழிபட்டுச் சென்றனர்.
புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் அனைத்து வைணவத் தலங்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். இந்த நாட்களில், சேலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சேலம் கோட்டை அழகிரிநாத சுவாமி கோயில் உள்ளிட்ட வைணவக் கோவில்களில், காலை முதற்கொண்டே ஆயிரக்கணக்கான பக்கதர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
எனினும், தற்போது கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, வெள்ளி முதல் ஞாயிறுக்கிழமை வரை, வழிபாட்டுதலங்களுக்கு செல்ல விதிக்கப்பட்ட தடை நீடித்து வருகிறது. இதனால், எந்த கோவில்களிலும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
இந்நிலையில், புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையான இன்று, கோயில்களுக்கு செல்ல முடியாத பக்தர்கள் பலரும், கோட்டை அழகிரிநாத சுவாமி கோயில், பட்டைக்கோயில் எனப்படும் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளிட்ட முக்கிய வழிபாட்டு தலங்களில், வாயில் முன்பாக நின்றபடியே வழிபட்டு சென்றனர். அதே நேரம், கோயில்களில் பக்தர்களின்றி வழக்கம்போல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.