நிலுவை சம்பளம் கேட்டு சேலம் மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள் தர்ணா
நிலுவை சம்பளம் வழங்கக்கோரி, சேலம் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள், தங்களுக்கு கடந்த மூன்று மாத காலமாக மாத ஊதியம் வழங்கவில்லை என்று கூறி, மாநகராட்சி அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு 100க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
மாத ஊதியம் இல்லாமல் வீட்டு வாடகை செலுத்த முடியாமலும், உணவுக்கு வழி இல்லாமல் சிரமப்பட்டு வருவதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர். கொரோனா ஊரடங்கு காலத்திலும் உயிரை பணயம் வைத்து வேலை செய்து தங்களுக்கு ஊதியம் வழங்காமல் மாநகராட்சி நிர்வாகம் அலைக்கழிப்பதாக, தூய்மைப்பணியாளர்கள் குற்றம்சாட்டினர்.
பின்னர், மாநகராட்சி நிர்வாகம் நடத்திய பேச்சுவார்த்தையில் மாத ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததை அடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.