அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்: ஆய்வுக்கு பின் சேலம் கமிஷனர் உறுதி
சேலம் எருமாபாளையம் சுண்ணாம்பு சூளை தெரு பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என்று, மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் உறுதி அளித்துள்ளார்.;
சேலம் எருமாபாளையம் சுண்ணாம்பு சூளை தெரு பகுதியில் ஆய்வு மேற்கொண்ட, சேலம் மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ்.
சேலம் மாநகராட்சி அம்மாப்பேட்டை மண்டலம் கோட்டம் எண்.44-ல் எருமாபாளையம் சுண்ணாம்பு சூளை தெருவில் சுமார் 60 குடும்பங்களுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதி மக்களுக்கு சாலை வசதி, சாக்கடை வசதி, தெருவிளக்கு வசதி, கழிவு நீர் வெளியேற்றும் வசதி, சுகாதார வசதி மற்றும் பிற வசதிகள் வேண்டி, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றன. அவற்றை நிவர்த்தி செய்யும் நோக்கில், மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது, அப்பகுதி முழுவதையும் சுற்றி பார்த்து பொதுமக்களுக்கு என்னென்ன வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்பதை கேட்டறிந்தார். அப்பகுதி பொதுமக்கள், பல ஆண்டு காலமாக இந்த பகுதிக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என்றும், குறிப்பாக பொது சுகாதார வளாகங்கள், சாக்கடை வசதிகள் ஆகியவற்றை உடனே செய்து தர வேண்டுமெனவும், சாக்கடை கால்வாய்களில் மழைக்காலங்களில் அடைப்பு ஏற்பட்டு, சாக்கடை கழிவு நீர் சாலை பகுதிகளில் வழிந்து சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இந்த பணிகளை உடனடியாக எங்களுக்கு செய்து தரவேண்டும் எனவும், ஆணையாளரிடம் கேட்டுக் கொண்டனர்.
சம்மந்தப்பட்ட அலுவலர்களை அழைத்து அப்பகுதி மக்களுக்கு என்னென்ன அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர முடியும் என்பதை சர்வே செய்து, செய்யப்பட வேண்டிய பணிகளை உடனே செய்வதற்கு, அலுவலர்களுக்கு உத்தரவிட்டதோடு, பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறைவேற்றி தரப்படும் என உறுதி அளித்தார்.