கொரோனோ விதிமீறல்: அரசு, தனியார் பஸ்களுக்கு அபராதம் விதிப்பு

கொரோனோ நோய்தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கு, சேலம் மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

Update: 2021-04-22 06:45 GMT

தமிழகத்தில் கொரோனோ இரண்டாவது அலை வேகமாக பரவி, மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதையடுத்து நோய் பரவலை கட்டுப்படுத்த, தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது.  கடந்த 20 ஆம் தேதி முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர, அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 50 சதவீத பயணிகளை கொண்டு அமர்ந்து செல்லும் வகையில் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. பயணிகள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், பேருந்துகளில் 50 சதவீத பயணிகள் மட்டும் உள்ளார்களா என, சேலம் அம்மாபேட்டை பகுதியில் மாநகராட்சி அதிகாரிகள் பேருந்துகளை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இதில், அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 50 சதவீத பயணிகளுக்கு மேல் அனுமதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, ஓட்டுனர் மற்றும் நடத்துனரை  மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்ததுடன்  அதிக பயணிகளை ஏற்றி வந்த அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கு, 500 ரூபாய் முதல் 5000 வரை அபராதம் விதித்தனர். இன்று காலை முதல் நடத்தப்பட்ட சோதனையில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை அபராதமாக வசூலிக்கப்பட்டது.

Tags:    

Similar News