கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்கு 15 மணிநேரம் தாமதம்

50க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் காத்திருப்பு.. மருத்துவர்கள் செய்வதறியாது திணறி வருகின்றனர்.

Update: 2021-05-20 10:02 GMT

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. நாளொன்றுக்கு 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் நோய்த்தொற்றின் வேகம் அசுர வேகத்தில் உள்ளதால், நாளொன்றுக்கு 600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு தற்போது 5000 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிசன் வசதியுடன் கூடிய படுக்கைகள் இல்லாததாலும் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வினியோகம் இல்லாததால் நோயாளிகள் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதிகளை நோயாளிகளுக்கு ஏற்படுத் தர முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் தனியார் மருத்துவமனையில் போதிய அளவு ஆக்சிசன் இல்லாததால் நோயாளிகளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர். பல்வேறு தனியார் மருத்துவமனையில் இருந்து நோய் தொற்று நோயாளிகள் அரசு மருத்துவமனைக்கு வருவதால் அரசு மருத்துவமனையிலும் ஆக்சிசன் உடன் கூடிய படுக்கை வசதிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவல நிலையும் அரங்கேறி வருகிறது.

இந்த நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் நேற்று இரவு 11 மணிக்கு 20க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனத்தில் தொற்று நோயாளியுடன் வந்திருந்த நிலையில், தற்போது 50 க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனத்தில் கொரோனோ தொற்று நோயாளிகள் மருத்துவமனை வளாகத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கிட்டத்தட்ட 15 மணி நேரத்துக்கும் மேலாக படுக்கை வசதி கிடைக்காததால் இரண்டு மணி நேரத்தில் நான்கு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு மருத்துவமனை வளாகத்தின் முன்பு 50க்கும் மேற்பட்ட வாகனங்களில் நோயாளிகள் வளாகம் முன்பு சிகிச்சை பெறுவதால் மருத்துவர்கள் செய்வதறியாது திணறி வருகின்றனர்.

Tags:    

Similar News