சேலம் மாநகராட்சியில் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரம்
சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் வழங்கினார்.
கொரோனா நோய் தொற்று தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு வார நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக சேலம் மாநகராட்சிக்குட்பட்ட தற்காலிக பேருந்து நிலைய வளாகம், சாலையோர கடைகள், தனியார் துணிக்கடைகளில் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், கொரோனாவில் இருந்து எவ்வாறு தற்காத்து கொள்வது என்பது குறித்து விழிப்புணர்வு வாசகம் அடங்கிய துண்டு பிரசுரங்கள் மற்றும் முகக்கவசத்தை வழங்கினார். மேலும் அரசால் அறிவிக்கப்படுகின்ற அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றிட வேண்டும் என கேட்டுகொண்டார்.
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட சின்னக்கடை வீதி, முதல் அக்ரஹாரம் தெருவில் உள்ள தனியார் ஜவுளிக்கடைக்கு சென்று ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர், ஜவுளிகடையில் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கை வழிமுறைகள் சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறதா, கிருமி நாசினி சரியான முறையில் தெளிக்கப்பட்டுள்ளதா, ஜவுளிகடைக்கு வரும் வாடிக்கையாளர்களை காய்ச்சல் கண்டறியும் கருவி மூலம் பரிசோதனை செய்யப்படுகிறதா, அவ்வாறு பரிசோதனை செய்யப்பட்டதற்கு முறையாக பதிவேடு பராமரிக்கப்பட்டு உள்ளதா என்பதையும் ஆய்வு செய்தார்.