சேலத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் : முன்னாள் முதல்வர் மீது வழக்கு
சேலத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சேலத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதாக குற்றம்சாட்டி திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் நேற்று மாநில அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது வீட்டின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 23 ஆவது வார்டுக்கு உட்பட்ட பெண்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிலையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 90 பேர் மீது சூரமங்கலம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருப்பதால் காவல்துறை அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அனுமதியன்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது; நோய்த்தொற்று பரவும் நடவடிக்கையாக கூட்டம் கூட்டியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.