கொரோனா பணிக்கான வாடகை நிலுவை: மாநகராட்சி அலுவலகத்தை ஆட்டோ டிரைவர்கள் முற்றுகை
கொரோனா தடுப்பு பணிகளுக்கான வாடகை தொகை கேட்டு, சேலம் மாநகராட்சி அலுவலகத்தை ஆட்டோக்களுடன் வந்து ஓட்டுனர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.;
கொரோனா பெருந்தொற்று காலத்தில் சேலம் மாநகராட்சி நிர்வாகம் சார்பாக பொதுமக்களுக்கு ஆர்டிபிசிஆர் சோதனை செய்வது, கொரோனோ நோயாளிகளை அழைத்துச் செல்வது மற்றும் கொரோனா பரிசோதனை எடுக்கும் ஊழியர்களை அழைத்து செல்லும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சேலம் மாநகர பகுதிகளில் உள்ள 80க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் மூலமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மாநகராட்சி நிர்வாகம், ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தினசரி ஆயிரம் ரூபாய் வீதம் வாடகை தொகை நிர்ணயம் செய்திருந்தது.
இந்நிலையில், கடந்த 20 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை ஆட்டோகளுக்கு வாடகைத்தொகை வழங்கப்படாமல் உள்ளதாகக்கூறி, சேலம் மாநகராட்சி ஆணையாளர் அலுவலகத்தை, 30க்கும் மேற்பட்ட ஆட்டோக்களுடன் வந்து ஓட்டுனர்கள் இன்று முற்றுகையிட்டனர். ஒவ்வொரு ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் 20 ஆயிரம் வீதம், 80 ஆட்டோக்களுக்கு 15 லட்சத்திற்கு மேலாக பணம் வழங்கப்படாமல் உள்ளது என்றும் தெரிவித்தனர்.
கொரோனா பாதிப்பால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் நிலையில் வாடகைத் தொகை கிடைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்தனர். தகவலறிந்த மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வாடகை தொகை உடனே கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து ஆட்டோ ஓட்டுனர்கள் சமாதானமடைந்து கலைந்து சென்றனர்.