சேலத்தில் டோக்கன் பெற்றும் தடுப்பூசி போடுவதில் குளறுபடி - மக்கள் வாக்குவாதம்
சேலத்தில் முன்கூட்டியே டோக்கன் பெற்றும் முறையாக தடுப்பூசி போடவில்லை என்று கூறி, ஊழியர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்ட அளவில், 138 மையங்களில் கொரோனா தடுப்பு ஊசி போடப்பட்டு வருகிறது. சேலம் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு ஏற்கனவே இருந்த மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து தற்போது 30 இடங்களில் தடுப்பு ஊசி போடப்படுகிறது. ஒவ்வொரு மையத்திற்கும் ஒதுக்கப்படும் தடுப்பூசி மருந்துகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப டோக்கன் வினியோகம் செய்யப்பட்டு தடுப்பூசி போடப்படுகிறது.
இந்நிலையில் சேலம் அம்மாபேட்டை அண்ணா நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில், முன்கூட்டியே டோக்கன் பெற்றவர்களுக்கு, முறையாக தடுப்பூசி போடப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர். ஊழியர்களின் இந்த நடவடிக்கையினால் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் டோக்கன் வழங்கும் ஊழியரை துரத்திச் சென்று, பொதுமக்கள் டோக்கன் பெற முயன்றதால் தடுப்பூசி மையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
பின்னர் பொதுமக்களை ஊழியர்கள் சமரசம் செய்தனர். ஏற்கனவே டோக்கன் பெற்று அதிகாலை முதலே காத்திருந்த போதிலும், தங்களுக்கு தடுப்பு ஊசி போடப்படவில்லை என்று குற்றம்சாட்டிய பொதுமக்கள், ஊழியர்களின் அலட்சியப் போக்கால் பெரும் அவதிக்கு உள்ளாவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.