அம்மா உணவகத்தில் சேலம் மாநகராட்சி ஆணையாளர் திடீர் ஆய்வு
சேலத்தில், அம்மா உணவகத்தில் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.;
சேலம் மாநகராட்சியில் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை, வெங்கடப்பன் ரோடு, அஸ்தம்பட்டி, வின்சென்ட், கருங்கல்பட்டி, மணியனூர், சூரமங்கலம் உழவர் சந்தை, பழைய சூரமங்கலம், ஆற்றோரம், ஜோதி தியேட்டர் மெயின்ரோடு, சத்திரம் ஆகிய 11 இடங்களில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது.
மணியனூர் அம்மா உணவகத்தில் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் இன்று காலை திடீர் ஆய்வு செய்தார்.ஆய்வின் போது, அம்மா உணவகத்தில் பணிபுரியும் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை, இன்றைய தினம் பணிக்கு வருகை புரிந்தவர்களின் எண்ணிக்கை குறித்தும் சரியான நேரத்திற்கு அனைவரும் பணிக்கு வந்துள்ளனரா எனவும் ஆய்வு செய்தார்.
தினந்தோறும் சமைக்கும் உணவு வகைகள் என்ன, பொதுமக்கள் எத்தனை பேர் உணவருந்த வருகிறார்கள் போன்ற விவரங்களையும், அம்மா உணவகத்தில் சமைக்கப்படும் உணவிற்கு பயன்படுத்தும் அரிசியின் தரம், மளிகைப் பொருட்கள், காய்கறிகள் போன்றவை தரமான முறையில் உள்ளனவா என்றும் கேட்டறிந்தார். இருப்பு பதிவேடுகளையும் சரிபார்த்தார்,
பொதுமக்கள் உணவருந்தும் கூடம், உணவு சமைக்கும் கூடம், பொருட்கள் வைக்கப்படும் இருப்பு அறை போன்றவை சுத்தமான முறையில் வைக்கப்பட்டுள்ளதா என்றும் உணவருந்த வரும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் தட்டுகள், டம்ளர்கள், குடிநீர் ஆகியவைற்றை சுகாதாரமான முறையில் வைக்கப்பட்டுள்ளதா என்றும், ஆய்வு செய்த ஆணையாளர் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவு தரமானதாக உள்ளதா என்பதை, உணவு சாப்பிட்டு, அதன் தரத்தை ஆய்வு செய்தார்.
அம்மா உணவகம் சரியான நேரத்தில் திறக்கப்பட்டு, அங்கு வரும் பொதுமக்களுக்கு தரமான, சுத்தமான உணவுகளை சமைத்து வழங்க வேண்டும் எனவும், உணவுக்கூடங்கள், சமைக்கும் கூடங்கள் பொதுமக்கள் உணவருந்த பயன்படுத்தும் தட்டுகள், டம்ளர்கள் ஆகியவற்றை சுத்தமாக வைத்து உணவு வழங்க வேண்டும் என பணியாளர்களுக்கு, ஆணையாளர் அறிவுறுத்தினார்.