அம்மா உணவகம், சாக்கடை கால்வாய் தூர்வாரும் பணியை ஆய்வு செய்த ஆணையாளர்
சேலம் மாநகராட்சி பகுதிகளில் அம்மா உணவகம், சாக்கடை கால்வாய் தூர்வாரும் பணியை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு செய்தார்.
சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலத்தில் உள்ள அம்மா உணவகத்தில் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் இன்று நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின் போது அம்மா உணவகத்திற்கு தினந்தோறும் பொதுமக்கள் எத்தனை பேர் உணவருந்த வருகிறார்கள் என்பதையும், இங்கு உணவருந்த வரும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் தட்டுகள், டம்ளர்கள், குடிநீர் ஆகியவை சுகாதாரமான முறையில் வைக்கப்பட்டுள்ளதா என்றும், பொதுமக்கள் உணவருந்தும் கூடம், சமையல் அறை, பொருட்கள் வைக்கப்படும் இருப்பு அறை சுகாதாரமான முறையில் வைக்கப்பட்டுள்ளதா என்றும் கேட்டறிந்தார்.
அம்மா உணவகத்தில் உணவருந்திக்கொண்டிருந்த பொதுமக்களிடம் இங்கு வழங்கப்படுகின்ற உணவு தரமான முறையில் வழங்கப்படுகிறதா என்றும்,சரியான நேரத்திற்கு உணவு தயாரித்து வழங்குகிறார்களா எனவும் கேட்டறிந்ததோடு, உணவருந்த வரும் பொதுமக்களுக்கு சரியான நேரத்தில்உணவு வழங்கிட வேண்டும் அங்குள்ள பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதனை தொடர்ந்து மகேந்திரபுரி எஸ்.சி.சி.பி காலனியில் அய்யந்திருமாளிகை முதல் திருநகர், பாரதி நகர், ராகவன் தெரு வரை சுமார் 500 மீட்டர் நீளத்திற்கு சாக்கடை கால்வாய் தூர்வாரும் பணியை ஆய்வு செய்தார். சாக்கடை கால்வாய் தூர்வாரும் பணிகள் அனைத்தும் விரைந்து முடித்திட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.