பாஜக இயக்கும் ஒரு அமைப்புதான் அதிமுக: ராகுல்காந்தி பேச்சு
சேலத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு காங்கிஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசும் போது பா.ஜ.க இயக்கும் ஒரு அமைப்பாகதான் அதிமுக உள்ளது என்று தெரிவித்தார்.
சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஒரே மேடையில் பிரச்சாரம் மேற்கொண்டனர். அப்போது அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பேசியதாவது:
இந்தியாவை ஒற்றை சிந்தனையில் தள்ளும் முயற்சி ஏற்புடையதல்ல .ஒற்றை சிந்தனை என்பதை ஒப்புக்கொள்ள மறுக்கிறேன் என்றார். தமிழகத்தில் பல தேர்தல்களை சந்தித்திருக்கிறோம் ஆனால் தற்போது நடப்பது இரண்டு கட்சிகளுக்கு இடையிலான தேர்தல் இல்லை என்று பேசியவர்,
தமிழ் கலாசாரம்,மொழி மீது முழுமையான தாக்குதலை சந்தித்து கொண்டிருக்கிறோம். தமிழகத்தின் மீதான தாக்குதல் ஒட்டு மொத்த இந்தியா மீதான தாக்குதாலாக பார்க்கிறேன் என்று கூறினார்.
இந்தியா பல்வேறு மதங்களின் பண்பாடுகளின் ஒருங்கிணைப்பு. எந்த ஒரு கலாசாரமும், பண்பாடும், மொழியும் ஒன்றைவிட ஒன்று உயர்ந்தது கிடையாது என்றார். வீரமணி பேசும் போது சிறந்த கருத்தை சொன்னார்.
கொரோனா நேரத்தில் முக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று சொன்னார். முக்கவசம் அணிவதால் ஒருவர் என்ன மனநிலையில் அருகே இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள முடியவில்லை. இப்போது இருப்பது பழைய அதிமுக இல்லை. அதிமுக முக கவசம் அணிந்துள்ளது. அதிமுகவின் முக கவசத்தை அகற்றினால் ஆர் எஸ் எஸ், பாஜக வின் முகமே தெரியும். பழைய அதிமுக இறந்து விட்டது. இப்போது இருப்பது பாஜக இயக்கும் ஒரு அமைப்பாக உள்ளது.
ஒரு தமிழன் கூட மோடி முன்பு தலைகுனிந்து நிற்க விரும்பவில்லை. அந்த நிலையில் முதலமைச்சர் ஏன் மோடி, அமித்ஷா காலடியில் கிடக்க வேண்டும். ஏன் முதலமைச்சர் தலைகுனிந்து நிற்கிறார் என்றால் புலனாய்வுதுறை வருமான வரித்துறை மோடியின் கட்டுப்பாட்டில் உள்ளது.
முதல்வர் ஒவ்வொரு முறை தலைகுனிந்து நிற்பதற்கும் ஒரு விலையை கொடுத்தாக வேண்டும் என்றும் பேசினார். மோடியும், அமித்ஷாவும் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்ற அனுமதியை முதல்வர் வழங்கியுள்ளார்.
திட்டமிட்டு தமிழர்களின் வாழ்க்கையை அழிக்க கூடிய கல்விக்கொள்கை திணிக்கப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ் பாஜக உள்ளே நுழையவிடாமல் தடுப்பதனால் அவர்கள் தாக்குதலை நிறுத்திக் கொள்ளமாட்டார்கள். அவர்களிடம் ஏராளமான பணம் உள்ளது. முதலில் தமிழகத்தில் நுழைவதை தடுத்து டெல்லியிலிருந்து அகற்ற வேண்டும் என்றும் பேசினார்.
இங்கு தேர்தலே தேவையில்லை, தேர்தலை சந்திக்காமலே ஸ்டாலின் முதலமைச்சராவார் என்ற நிலை உள்ளது. தமிழர்களுடன் எனது உறவு மிக எளிமையானது. அந்த உறவை என் பாட்டி, தந்தையாருடன் வந்த போது பார்த்திருக்கிறேன். குறைந்தபட்ச அன்பை காட்டினால் பேரன்பை தமிழர்கள் காட்டுபவர்கள். இதை மோடியும் ஆர்.எஸ்.எஸ்யும் உணர்ந்து கொள்ளவில்லை. தமிழர்கள் மனதில் இடம்பிடிக்க ஒரே வழி அன்பு, பாசம் மரியாதை மட்டும். இதை தேர்தலுக்கு பின்பு பாஜகவுக்கு புரிய வைப்போம் இவ்வாறு அவர் பேசினார்.