உண்டியல் சேமிப்பை கொரோனா நிதிக்கு தர முடிவு: 5 வயது சிறுவனின் தயாள குணம்
கொரனா நிவாரண நிதிக்கு, உண்டியலில் சேமித்து வைத்துள்ள பணத்தை வழங்கும் சேலம் சிறுவனின் முடிவை பலரும் பாராட்டியுள்ளனர்.
சேலம் மேட்டுத்தெரு பாண்டியராஜன் சாலையில் வசிப்பவர்கள், நாகராஜன் -கனிமொழி தம்பதியர். இவர்களின் 5 வயது மகன் வசீகரன், இரண்டு ஆண்டுகளாக உண்டியலில் அவ்வப்போது பணத்தை போட்டு, சேர்த்து வைத்து வந்துள்ளார்.
இந்த தொகையை , தற்போது கொரோனா நிவாரண நிதிக்காக வழங்க, சிறுவன் வசீகரன் முன் வந்துள்ளார். அதன்படி, சிறுவன் சேமித்து வைத்து இருந்த நிதியை, முதல்வரின் நிவாரண நிதிக்கு நேரடியாகவோ, அல்லது திமுக சட்டமன்ற உறுப்பினர் மூலமாகவோ அனுப்பி வைத்திட, அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
சிறுவன் வசீகரனின் இந்த செயலை, அக்கம் பக்கத்தினர் வெகுவாக பாராட்டினர். சிறு வயதில் குழந்தைகளுக்கு இதுபோல் சேமிப்பு பழக்கத்தையும், நன்கொடை அளிக்கும் எண்ணத்தையும் வளர்க்க வேண்டியது, மிகவும் அவசியமானதாகும்.