2 உலக சாதனை, 3 வயதில் டாக்டர் பட்டம்: வியக்க வைக்கும் சிறுவன்
தனது இரண்டரை வயதில் 82 நாடுகளின் தேசியக் கொடிகளை பார்த்து நாடுகளின் பெயரை சொல்லி உலக சாதனை படைத்துள்ளார்.
சேலம் செவ்வாய்ப்பேட்டை பகுதியை சேர்ந்த சுரேஷ், நந்தினி தம்பதியர்களின் 3 வயது குழந்தை தேஜஸ். நினைவாற்றல் அதிகம் நிறைந்துள்ளதால், சொல்லிக்கொடுக்கும் அனைத்தையும் மறக்காமல் நினைவு வைத்திருக்கும் ஆற்றல் கொண்டுள்ளார். இந்த ஆற்றலை பயனுள்ளதாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் பெற்றோர்கள் வீட்டில் இருக்கும் குழந்தைக்கு அறிவு திறனை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கினர்.
தனது இரண்டரை வயதில் 82 நாடுகளின் தேசியக் கொடிகளை பார்த்து நாடுகளின் பெயரை சொல்லி உலக சாதனை படைத்துள்ளார். இதை தொடர்ந்து 102 பிரபல தலைவர்களின் புகைப்படத்தை பார்த்து அவர்களின் பெயர்களை சொல்லியும், ஒரு நிமிடத்தில் 51 வெளிநாடு மீன்களின் பெயர்களையும் கூறி அனைவரையும் வியக்க வைத்து மற்றொரு சாதனை படைத்தார்.
இந்த இரண்டு சாதனைகளையும் பாராட்டி மதுரையை சேர்ந்த சர்வதேச தமிழ் பல்கலைக்கழகத்தில் இரண்டரை வயது சிறுவன் தேஜஸ்க்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளனர். இதுவரை 16 பதக்கங்கள், உலகச் சாதனை சான்றிதழ் பலவும் பெற்று அனைவரையும் வியக்க வைத்து வருகிறார்.
குறிப்பாக தேஜஸ்க்கு தினசரி 10 நிமிடம் மட்டுமே பயிற்சி கொடுத்ததாகவும் அவனது ஆர்வமும், நினைவாற்றலும் இதுபோன்ற சாதனைகளுக்கு வழிவகுத்தது என்றும் அவரது தாய் பெருமிதப்படுகிறார்.
மேலும் பெற்றோர்கள் குழந்தைகளின் ஆர்வத்தை புரிந்து கொண்டு குழந்தைகள் விரும்பும் அந்தந்த துறைகளில் அவர்களுக்கு பயிற்சி அளித்து ஊக்கப்படுத்தும் போது பெரும் சாதனையாளர்களாக உருவாக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.