சேலத்தில் 11 மாதங்களுக்கு பிறகு அனைத்து கல்லூரிகள் மற்றும் 9, 11 ஆம் வகுப்புகள் செயல்பட துவங்கியது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. இந்நிலையில் பொதுத்தேர்வு நெருங்கி வருவதால் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் கடந்த ஜனவரி மாதம் 19 ம் தேதி முதல் திறக்கப்பட்டன. மேலும் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு கல்லூரிகள் டிசம்பர் 6 ம் தேதி முதல் திறக்கப்பட்டன.
இந்நிலையில் மற்ற வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. கொரோனா தாக்கம் குறைந்து வருவதாலும் மாணவர்களுக்கு கொரோனா நோய் காரணமாக எந்த பாதிப்பும் இல்லாத காரணத்தால், மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்க ஆலோசனை வழங்கப்பட்டது. இதற்கு பெற்றோர்களும் ஒப்புதல் வழங்கிய நிலையில் பள்ளிகள் பிப்ரவரி 8 ம் தேதி முதல் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும், பள்ளியில் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் வகுப்புகள் செயல்பட துவங்கியது. பல நாள் கழித்து பள்ளிக்கு மாணவர்கள் வருவதால் பெரும் ஆர்வத்துடன் வந்தனர். பள்ளி மற்றும் கல்லூரிக்கு வரும் மாணவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்தும் கிருமி நாசினி வழங்கியும் வருகின்றனர். மேலும் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். மேலும் கல்வி நிலையங்களில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்ற வேண்டும் என பள்ளி கல்லூரி நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.