காவல்துறையினர் பொய் வழக்கு பதிய முயற்சிப்பதாக கூறி சேலத்தில் காவல் நிலையம் முன்பு பிளேடால் கழுத்தை அறுத்துகொண்ட வாலிபரை அங்கிருந்த ஆட்டோ ஓட்டுனர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சேலம் கிச்சிப்பாளையம் ஜலால்புறா பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளையன் என்கின்ற பைரோஸ்(38). அவர் திடீரென சேலம் நகர காவல்நிலையம் முன்பாக தனது கழுத்தை பிளேடால் அறுத்துக்கொண்டு தற்கொலை செய்ய முயன்றார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அருகிலிருந்த ஆட்டோ ஓட்டுனர்கள் உடனடியாக பைரோசை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
கடந்த 2008 ம் ஆண்டு கொலை சம்பவம் ஒன்றில் தொடர்புடைய பைரோஸ் 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை முடிந்து வெளியே வந்துள்ளார். தற்போது இறைச்சிக்கடை ஒன்றில் கூலி வேலை செய்து வரும் பைரோஸ் மீது காவல் துறையினர் பொய் வழக்கு பதிய முயற்சிப்பதாக கூறப்படுகிறது. மனம் திருந்தி கூலிவேலை செய்து வரும் தன்மீது பொய் வழக்கு பதிவதற்காக தொடர்ந்து காவல்துறையினர் தொல்லை கொடுத்து வருவதால் விரக்தி அடைந்து தற்கொலை செய்யும் முடிவிற்கு வந்ததாக வாலிபர் பைரோஸ் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.