சசிகலா உடல்நலக்குறைவு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது: முத்தரசன்
பெரியார் போல, அண்ணா கடவுள் இல்லை என்று சொல்லவில்லை -முத்தரசன்.
குடியரசு தின விழாவை ஒட்டி சேலம் டவுன் ரயில்வே நிலையம் அருகில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, குடியரசு தினத்தன்று கொரோனாவை காரணம் காட்டி கிராம சபை கூட்டங்களை ரத்து செய்வது கண்டனத்துக்குரியது. கிராம சபை கூட்டங்கள் நடந்தால் விவசாய போராட்டத்தையொட்டி மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்ற அச்சத்தில் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின்படி கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படுவது மக்களின் உரிமைகள், அந்த அடிப்படை உரிமைக்களை பறிப்பது ஏற்புடையதல்ல. முதல்வரின் தேர்தல் பரப்புரையின் போது கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், சசிகலா பூரணமாக குணமடைந்து விடுதலையாக வாழ்த்துகள் எனவும், டெல்லியில் பிரதமரை முதலமைச்சர் சந்தித்த பிறகு சசிகலா உடல்நலக்குறைவு ஏற்பட்டது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது என்றார். மேலும் முருகன் தமிழ்மக்களின் கடவுள், சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர், அவர் அனைவருக்கும் பொதுவானவர்.
தனிப்பட்ட முறையில் முருகனை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதே அறிஞர் அண்ணாவின் கொள்கை. பெரியார் போல, அண்ணா கடவுள் இல்லை என்று சொல்லவில்லை என்றும் கூறிய அவர், தமிழகத்தில் மூன்றாவது அணி அமைவதற்கு வாய்ப்பில்லை என்றும் அதிமுக கூட்டணியில் குழப்பம் இருக்கிறது. திமுக கூட்டணி பலமாக இருக்கிறது என்று தெரிவித்தார்.