இனியாவது திருந்தணும்: சேலத்தில் விதிமீறிய 3 பிரபல கடைகளுக்கு 'சீல்'!
சேலத்தில், கொரோனா விதிகளை மீறி செயல்பட்ட 3 பிரபல துணிக்கடைகளுக்கு, மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
தமிழகத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக, பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. அதன்படி சேலத்தில் நோய் தடுப்பு விதிகளை மீறுவோர் மீது, மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில், கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சேலம் 4 ரோடு அருகே உள்ள போத்தீஸ், குமரப்பா சில்க்ஸ் மற்றும் சிவா டெக்ஸ்டைல்ஸ் ஆகிய 3 கடைகள், பின்பக்க வாசல் வழியாக செயல்பட்டு வருவதாக, மாநகராட்சி அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சூரமங்கலம் மண்டல உதவி ஆணையாளர் ராம்மோகன் தலைமையிலான மாநகராட்சி அதிகாரிகள், சம்மந்தப்பட்ட கடைகளில் அதிரடி ஆய்வு நடத்தினர். அப்போது 3 கடைகளிலும் திரளான பொதுமக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், அனைவரையும் வெளியே அனுப்பினர்.
அரசு உத்தரவை மீறி பின்வாசல் வழியாக செயல்பட்ட கடை நிர்வாகிகளை, அதிகாரிகள் கடுமையாக எச்சரித்ததோடு, தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். பின்னர், அந்த ஜவுளிக்கடைகளுக்கு பூட்டி சீல் வைத்தனர்.
மாநகரின் மையப்பகுதியில் விதியை மீறி செயல்பட்டதாக, அடுத்தடுத்து 3 பிரபலமான துணிக்கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.