பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சேலத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும் நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல், கேஸ் விலை புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலையை கட்டுப்படுத்தாத மத்திய அரசை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநில துணை பொதுச் செயலாளர் ஜெயமோகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
மேலும் தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்ததை சுட்டிக்காட்டி, மத்திய அரசு நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.