கொரோனா விதிமீறல்: சேலத்தில் சூப்பர் மார்க்கெட்டுக்கு "சீல்"
கொரோனா தடுப்பு விதிகளை மீறி செயல்பட்டதாக, சேலத்தில் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட்டுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
தமிழகத்தில் நோய் தடுப்பு நடவடிக்கையாக 3 ஆயிரம் சதுரடி பரப்பளவிற்கு மேல் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட, தமிழக அரசு தடை விதித்துள்ளது. அதனை மீறுவோர் மீது கடும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள பாரதி சூப்பர் மார்க்கெட், கொரோனா விதிகளை மீறி செயல்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மாநகராட்சி உதவி ஆணையர் சரவணன் தலைமையிலான அதிகாரிகள் சம்மந்தப்பட்ட கடையில் அதிரடி ஆய்வு நடத்தினர்.
அப்போது, விதிகளை மீறி சூப்பர் மார்க்கெட் செயல்பட்டு வந்தது தெரியவந்தது . இதையடுத்து கடையில் இருந்த வாடிக்கையாளர்களை வெளியே அனுப்பிய மாநகராட்சி அதிகாரிகள், கடை உரிமையாளருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்ததோடு கடையை மூடி சீல் வைத்தனர். இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.