பெட்ரோல் விலை உயர்வுக்காக பாஜக போராடுமா? அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி!
டாஸ்மாக் கடை திறப்பதற்கு போராட்டம் நடத்தும் பாஜக அரசு, பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தாதது ஏன்? என்று, அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தில் உச்சகட்டமாக 36 ஆயிரம் பேருக்கு பெரும் தொற்று இருந்தது. அரசின் நடவடிக்கைகளால், பாதியாக குறைந்துள்ளது. தமிழகத்தில் தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில், டாஸ்மாக் கடைகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் டாஸ்மாக் கடை திறக்க அனுமதி இல்லை.
கொரோனா பாதிப்பு உச்சகட்டமாக இருந்தபோதும், கர்நாடகாவில் மதுபானகடைகள் தடையின்றி செயல்பட்டன. ஆனால் தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுதான் இருந்தன. அதிமுக ஆட்சியில், கொரோனா பாதிப்பு உச்சமாக இருக்கும்போதே டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டிருந்தன.
ஆனால், தமிழகத்தில் தற்போது தொற்று குறைந்த காரணத்தினால்தான், மதுபானக்கடைகளை திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் 27 மாவட்டங்களிலும் உள்ள மதுபான கடைகளில் கிருமிநாசினி கொடுக்கப்பட்டு காவல்துறை உதவியுடன் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
தமிழகத்தில் மதுபானக்கடை திறப்புக்கு எதிராக போராட்டம் நடத்தும் பாஜகவினர், பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தாதது ஏன்? பாஜக அரசியலுக்காகவும், தமிழகத்தில் தனது இருப்பைக் காட்டிக் கொள்வதற்காகவும் தான் போராட்டம் நடத்துகிறது என்று, செந்தில் பாலாஜி கூறினார்.