சிதறிய மது பாட்டில்கள்: அள்ளிச் சென்ற மக்கள்
தவறி விழுந்த மதுபாட்டில்களை சாலையில் சென்ற பொதுமக்கள் முண்டியடித்து அள்ளி சென்றனர்.;
சேலத்தில் ஆட்சியர் அலுவலகம் முன்பு சென்ற இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த மதுபாட்டில்களை சாலையில் சென்ற பொதுமக்கள் முண்டியடித்து அள்ளி சென்றனர்.
தமிழகத்தில் நோய் தடுப்பு நடவடிக்கையாக கூடுதல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்த நிலையில் டாஸ்மாக் கடைகள் காலை 8 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்படுகிறது. நேரக் கட்டுப்பாடு காரணமாக சந்து கடைகளில் வியாபாரம் களைகட்டியுள்ளது. இந்த நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள பிரதான சாலையில் சென்ற இரு சக்கர வாகனம் ஒன்றில் இருந்து ஒரு அட்டைப் பெட்டி தவறி கீழே விழுந்தது. அதில் இருந்த மது பாட்டில்கள் சாலையில் சிதறி ஓடின.
இதைப்பார்த்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் ஒருவருக்கொருவர் முந்திக்கொண்டு சாலையில் விழுந்த மதுபாட்டில்களை அள்ளிச் சென்றனர். இதையடுத்து போக்குவரத்து போலீசார் சாலையில் சிதறிய பாட்டில் கண்ணாடிகளை அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தில் மது பாட்டில்களை தவறவிட்ட நபர்கள் வாகனத்தை நிறுத்தாமல் சென்றதால் கள்ள சந்தையில் விற்பதற்காக வாங்கி செல்லப்பட்ட மது பாட்டில்களாக இருக்கும் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.