6 மணி நேரம் கடை திறக்க அனுமதி கொடுங்க: முடித்திருத்துவோர் மனு
சலூன் கடைகளை, குறைந்தது 6 மணி நேரமாவது திறக்க அனுமதி தரும்படி, சேலம் கலெக்டரிம் முடிதிருத்தும் தொழிலாளர்கள் மனு அளித்தனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை, அதிவேகமாக பரவி அச்சுறுத்தி வருகிறது. நோய்த் தொற்றைத் தடுக்கும் விதமாக, மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.
அவ்வகையில், தமிழக அரசும் பல்வேறு கட்டுப்பாடுகளையும் அறிவித்துள்ளது. அதன்படி, சலூன் கடைகள், அழகு நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு வணிக நிறுவனங்கள், கடைகளை மூட வேண்டும் என உத்தரவிட்டது. எனினும், தமிழகம் முழுவதும் சலூன் கடைகளை திறக்க அனுமதி வழங்கக்கோரி, பல்வேறு பகுதிகள் மனு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு சவரத்தொழிலாளர் சங்கத்தின் சார்பில், சலூன் கடைகளை திறக்க அனுமதி வழங்க வேண்டும் ; குறைந்தபட்சம் 6 மணி நேரம் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு வழங்கினர்.
முடிதிருத்தும் தொழிலாளர்கள் கூறுகையில் , இதுவரை சலூன் கடைகள் மூலம் கொரோனா தொற்று பரவியுள்ளதாக எங்கும் தகவல் இல்லை. எனவே உடனடியாக தமிழக அரசு எங்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், சலூன் கடைகளை திறக்க நேரக் கட்டுப்பாடு வழங்கி அனுமதிக்க வேண்டும் என்றனர்.