சேலத்தில் ஹெல்மெட் வாங்கினால் பெட்ரோல், சானிடைசர், 100 மாஸ்க் இலவசம்!
சேலத்தில், ஹெல்மெட் வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோல், 100 மாஸ்க், சானிடைசர், இலவசம் என்ற அறிவிப்பு, மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
சாலை விபத்தை குறைக்கும் வகையில், வாகன ஓட்டிகள், கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என , அரசு அறிவுறுத்தி வருகிறது. இதுகுறித்து, போக்குவரத்து காவல் துறையினரும் பல்வேறு வகையில் விழிப்புணர்வுகளை அவ்வப்போது ஏற்படுத்தி வருகின்றனர். ஹெல்மெட் அணியாதவர்களுக்கு, அபராதம் விதித்தும் வருகின்றனர்.
மறுபுறம், பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. தற்போது லிட்டர் 102 ரூபாய் வரை உயர்ந்துள்ளது, இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில், பொதுமக்களை கவரும் விதமாக , விழிப்புணர்வு நோக்கில், ஒரு ஹெல்மெட் வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என்ற அதிரடி சலுகையை, சேலம் கோட்டை பகுதியை சேர்ந்த ஹெல்மெட் வியாபாரி முகமது காசிம் அறிவித்துள்ளார்.
சேலம் கோட்டை பகுதியில் 7 ஆண்டுகளாக ஹெல்மெட் கடை நடத்தி வரும் இவர், வாகன ஓட்டிகள் ஹெல்மெட் கட்டாயம் அணிவதன் அவசியம் குறித்து, அவ்வப்போது பல்வேறு விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருகிறார். தற்போது "தலைகவசம் தலையை மட்டும் அல்ல தலைமுறையையும் காக்கும்" என்ற வாசகத்தை முன்னெடுத்து ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி, 399 ரூபாய் மதிப்புள்ள ஒரு ஹெல்மட் வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என்ற கவர்ச்சிகரமான சலுகையை அறிவித்துள்ளார்.
இதுமட்டுமின்றி கொரோனோ நோய் தொற்றிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில், 499 ரூபாய் மதிப்புள்ள ஒரு ஹெல்மெட் வாங்கினால், 100 சர்ஜிகல் மாஸ்க், பேஸ்ஷீல்டு, சனிடைசர் ஆகியவற்றை இலவசமாக வழங்கப்படும் என்றும் விளம்பரம் செய்து வருகிறார். இந்த சலுகைகள், இன்று முதல் வரும் 17-ஆம் தேதி வரை இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு வெங்காயம் விலை கிலோ 150 ரூபாய் என்று உயர்ந்தபோது, ஹெல்மெட் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம் என்று, முகமது காசிம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.