சேலத்தில் இருதரப்பு மோதல் - காவல்நிலையம் முற்றுகை
சேலத்தில், இருதரப்பு மோதல் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி இருதரப்பினர், காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர்.;
சேலம் மாநகர பகுதிகளில், 150 க்கும் மேற்பட்ட திருநங்கைகள் இரு பிரிவுகளாக வசித்து வருகின்றனர். இந்த இரு பிரிவினருக்குமிடையே அவ்வப்போது பிரச்னை எழுவதுண்டு. இந்நிலையில் சேலம் புதிய பேருந்து நிலையத்தில் கடை தொடர்பாக, திருநங்கைகள் சிலரிடையே பிரச்னை எழுந்துள்ளது.
அப்போது ஏற்பட்ட கைகலப்பில், கலைவாணி மற்றும் மித்ரா ஆகிய இருவரை, மூன்று திருநங்கைகள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக சேலம். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதனிடையே பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், மூன்று திருநங்கைகளை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த தகவலறிந்த இருதரப்பை சேர்ந்த சக திருநங்கைகள், பள்ளப்பட்டி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். காவல்துறையினர் ஒருதலைபட்சமாக நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், உரிய விசாரணை நடத்தி இருதரப்பினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திருநங்கைகள் கோரிக்கை விடுத்தனர்.