சேலம் கலெக்டர் வளாக ஏடிஎம் மையத்தில் தீ விபத்து
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் மையத்தில் இன்று திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதனால் பரபரப்பு நிலவியது.;
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் மையத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டது.
சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில், 52 அரசுத்துறை அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. கட்டிடத்தின் தரை தளத்தின் ஒரு பகுதியில், பாரத ஸ்டேட் வங்கி கிளையும், அருகாமையில் அதன் ஏடிஎம் மையமும் உள்ளது.
இந்த ஏடிஎம் மையத்தில் இருந்து இன்று பிற்பகல் திடீரென கரும்புகை வெளியாகியுள்ளது. அதைக்கண்ட வங்கி ஊழியர்கள், உடனடியாக செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதனிடையே வங்கிக்கு சொந்தமான தீயணைப்பு சாதனைத்தை பயன்படுத்தி, வங்கி ஊழியர்கள் சிலர், தீயை கட்டுப்படுத்த முயன்றனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், ஏடிஎம் மையத்தில் தீயை அணைக்கும் பணியில் துரிதமாக ஈடுபட்டு, சுமார் 15 நிமிடங்களில் தீயை அணைத்தனர். இதனால், ஏடிஎம் இயந்திரத்திற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. ஏடிஎம் இயந்திரத்திற்கு பின்புறம் உள்ள, யூபிஎஸ் பேட்டரியில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து, சேலம் நகர காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்து, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக ஏடிஎம் மையத்தில் ஏற்பட்ட தீவிபத்தால், அங்கு பரபரப்பு நிலவியது.