கோட்டை மைதானத்தில் கொரோனா மையமா? சேலத்தில் முற்றுகை

சேலம் கோட்டை மைதானம் அருகே, கொரோனா சிகிச்சை மையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டனர்.;

Update: 2021-04-20 05:00 GMT

சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்குநாள் நாள் அதிவேகமாக அதிகரித்து வருகிறது.  நேற்று 350க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இதுவரை 1700 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனை மற்றும் சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நோய்த்தொற்றை தடுப்பதற்காக சுகாதாரத் துறை நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா தொற்றினால்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க பல்வேறு இடங்களில் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சேலம் கோட்டை மைதானம் அருகே மாநகராட்சி சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரங்கத்தில்,  கொரோனா சிகிச்சை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கோட்டை அரங்கம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்ப்பட்டது.

தகவல் அறிந்து வந்த சேலம் டவுன் காவல் துறையினர் மற்றும் சுகாதாரத்துறையினர் முற்றுகையிட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சுகாதாரத்துறை சார்பிலும் மாநகராட்சி சார்பிலும் பொதுமக்களிடம் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படாமல் இருக்க மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத் துறையினர் மாநகராட்சி நிர்வாகம் என பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எனவே இப்பகுதியில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டுமெனவும் சுகாதாரத்துறை சார்பில்,  பொதுமக்களிடம் எடுத்து விளக்கப்பட்டது. ஒருமணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, தற்காலிகமாக சிகிச்சை மையம் அமைக்கும் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, கோட்டை பகுதியில்  அடுக்கு மாடி குடியிருப்புகள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு அதிகளவில் சர்க்கரை நோயாளிகள் உள்ளிட்ட  நோயாளிகள் அதிகம் உள்ளனர். குழந்தைகள் அதிகம் இருப்பதாலும், இந்த பகுதியில்  கொரோனா சிகிச்சை மையம் அமைக்க வேண்டாம் என்றும்  மாற்று இடத்தில் வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டதாக தெரிவித்தனர்.

Tags:    

Similar News