சாலையில் குவிந்த மண்... பொறுப்புடன் அப்புறப்படுத்திய காவலர்- குவிகிறது பாராட்டு!
சேலம் அஸ்தம்பட்டி பகுதியில், சாலையில் கொட்டி கிடந்த மண்ணை அப்புறப்படுத்திய காவலருக்கு பாராட்டுகள் குவிகிறது
சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டணா பகுதியில், இரவுநேர காவல் பணியில் மணி என்பவர் இருந்து வருகிறார். அவர் பணியில் இருந்த போது, அந்த வழியாகச் சென்ற லாரியில் இருந்து சாலையில் மண் கொட்டி உள்ளது.
சாலையில் குவிந்த மணலால், இருசக்கர வாகன ஓட்டிகள் வாகனத்தை ஓட்டுவதற்கு பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் விபத்து அபாயமும் இருந்தது. இதனை அறிந்த காவலர் மணி, சற்றும் தயங்காமல், அருகில் உள்ள கடைக்கு சென்று துடைப்பத்தை வாங்கி சாலையில் கொட்டி கிடந்த மண்ணை வேகமாக அப்புறப்படுத்தினார்.
அனைத்து மண்ணையும் சாலையிலிருந்து அப்புறப்படுத்திவிட்டு போக்குவரத்தை ஒழுங்கு படுத்தினார். அவரது இந்த செயல், பலரையும் ஆச்சரியப்படுத்தியது. சலையை அவர் தூய்மைப்படுத்தும் வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தன்னலம் பாராமல் பொது நலனே முக்கியம் என்ற நோக்கத்துடன் செயல்பட்ட காவலர் மணியை, பலரும் பாராட்டி வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் மட்டுமல்லாமல், காவல்துறையை சேர்ந்த அதிகாரிகளும் மணியின் செயல்பாட்டை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளனர்.