சேலம் கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தக்கோரி இந்து மகா சபாவினர் மனு
சேலம் கோவில்களில் ஆலயத் திருப்பணிகளை விரைந்து முடித்து கும்பாபிஷேகம் நடத்தக்கோரி இந்து மகா சபாவினர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.;
ஆட்சியர் அலுவலகத்திற்கு சிவன் வேடம் அணிந்து பேரணியாக மனு அளிக்க வந்த இந்து மகா சபாவினர்.
சேலம் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் திருக்கோயில், கோட்டை மாரியம்மன் திருக்கோவில், குகை மாரியம்மன் கோயில் மற்றும் கரபுரநாதர் கோயில் ஆகியவற்றில் நீண்ட நாட்களாக ஆலய திருப்பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதனால் இந்தக் கோயில்களில் நீண்ட வருடங்களாக கும்பாபிஷேக விழாவும் நடைபெறவில்லை.
இந்த நிலையில் சேலம் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோயில்களில் மிகவும் ஆமை வேகத்தில் நடந்து வரும் திருப்பணிகளை விரைந்து முடித்து, விரைவில் கும்பாபிஷேக விழா நடத்த வேண்டும் என வலியுறுத்தி அகில பாரத இந்து மகா சபாவினர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
முன்னதாக ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தவர்கள் சிவன் வேடம் அணிந்து பேரணியாக வந்ததால், அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.