ஆக்சிஜன் படுக்கை வசதிகளை அதிகப்படுத்த வேண்டும் - எடப்பாடி பழனிச்சாமி

தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, ஆக்சிஜன் படுக்கை வசதிகளை அதிகப்படுத்த வேண்டும் - எடப்பாடி பழனிச்சாமி;

Update: 2021-05-25 15:30 GMT

கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்தி,  உயரிழப்புகளை தடுக்கும் வகையில், தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, ஆக்சிஜன் படுக்கை வசதிகளை அதிகப்படுத்த வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி சேலத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து பின்னர்,  அரசு மருத்துவமனை டீனை  சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்...

அஇஅதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு, சேலம் மாவட்ட  அதிமுக  கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுடன் வருகை தந்தார். மாவட்ட ஆட்சியர் கார்மேகத்தை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவல் குறித்தும், அதற்கான தடுப்பு  நடவடிக்கைகள் ஆலோசனை  நடத்தினார். இதனையடுத்து, சேலம் அரசு மருத்துவமனைக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி, டீன் வள்ளி சத்தியமூர்த்தி மற்றும் மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி கூறியது.

இன்றைக்கு கொரோனா நோய் பரவலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இது வேதனையளிக்கிறது. அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, வேகமாக பரவி வரும் 2-ம் அலையை கட்டுப்படுத்த வேண்டும். ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்கினாலே உயிரிழப்பை தடுக்கலாம். மத்திய அரசிடம் பேசி கூடுதலாக ஆக்சிஜன் பெற்று அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்க வேண்டும். ஏற்கனவே, தான் கடிதம் மூலமாக பிரதமரிடம் கோரிக்கை விடுத்தேன்.

எங்களுடைய அரசு எடுத்த நடவடிக்கைகளை தொடர்ந்தால் கொரோனாவை கட்டுபடுத்தலாம். நாங்கள் ஆட்சியில் இருந்தபோது, தினசரி பாதிப்பு 6,900 என்பதே உச்சமாக இருந்தது. தற்போது 35 ஆயிரமாக தினசரி பாதிப்பு உயர்ந்துள்ளது. இதனை கட்டுப்படுத்த வேண்டும். நாங்கள் இருந்தபோது கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. தேவையான ஆக்சிஜன் படுக்கை வசதிகளை அதிகப்படுத்த வேண்டும். அதிமுக ஆட்சியில் இருந்த அளவிற்குத்தான் சேலம் மாவட்டத்தில் தற்போதும் ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளன. இதனை அதிகப்படுத்தவில்லை. நாளொன்றுக்கு 800 பேர் சராசரியாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில், ஆக்சிஜன் படுக்கை வசதிகளை அதிகரிக்க வேண்டும். சேலம் உருக்காலை வளாகத்தில் ஆக்சிஜன் படுக்கை சிகிச்சை மையத்தினை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.அனைத்துப் பணிகளையும் ஒதுக்கிவைத்து விட்டு மூச்சுத் திணறலுடன் வரும் நோயாளிகளுக்கு உடனடி சிகிச்சை அளிக்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் அப்போது, 3500 காய்ச்சல் சிகிச்சை முகாம் நாள்தோறும் நடத்தப்பட்டது. அதனால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது. அதேபோல நடவடிக்கை எடுத்தால் இப்போதும் கட்டுப்படுத்தலாம். இதேபோன்று பெரிய நகராட்சி, ஊராட்சிகளில் வீடு வீடாக சோதனை நடத்த வேண்டும். ஒரு நாள் பாதிப்பு 36 ஆயிரம் பேராக உயர்ந்துள்ள நிலையில், தினசரி பரிசோதனையை 3 லட்சமாக அதிகரிக்க வேண்டும். தற்போது நடைபெறும் பரிசோதனை போதாது. பரிசோதனை மையங்களையும் அதிகரித்து, 24 மணி நேரத்தில் முடிவுகளை அறிவிக்க வேண்டும். தற்போது 3 நாட்கள் வரை ஆவதால், நோய் பாதிப்பு அதிகமாகிறது. நாங்கள் 24 மணி நேரத்தில் கொடுத்தது போல விரைவாக அறிவிக்க வேண்டும். அப்போதுதான் நோய் பாதிப்பில் இருந்து குணமாக சிகிச்சையளிக்க முடியும்.

தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு கூட கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கவில்லை. தலைமை செயலாளர் மூலமாகத் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது சமூக பரவலைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.எங்களைப் பொருத்தவரை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அந்தந்த பகுதி அரசு மருத்துவமனைகளை ஆய்வு செய்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஆலோசனை வழங்கி வருகிறார்கள்.

ஊரடங்கு காலத்தில் மாற்றுத் திறனாளிகள்,ஏழை எளிய மக்களுக்கு உணவு கிடைக்க சமுதாய சமையலறை அமைத்து உணவு அளிக்கப்பட்டது. இதேபோன்று தற்போதும் வழங்கப்பட வேண்டும். அமைப்புச் சாரா தொழிலாளர்களுக்கு உள்ளிட்ட அமைப்பினருக்கு கொரோனா நிவாரணத் தொகை ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும். தேவையான அளவிற்கு தடுப்பூசி அளிக்க பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். 10 சதவீத தடுப்பூசி மட்டுமே வந்துள்ளது. கோவாக்சின் தட்டுப்பாடின்றி கிடைத்து, 2-வது டோஸ் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Tags:    

Similar News