சேலத்தில் அவலம் - ஆக்சிஜன் படுக்கையின்றி தரையில் சிகிச்சை பெறும் நோயாளிகள்
சேலம் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பியதால், கொரோனா நோயாளிகள் தரையில் படுத்து சிகிச்சை பெறும் அவலம் ஏற்பட்டுள்ளது.;
சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டி வருகிறது. மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு தொடர்வதால், பெரும்பாலான நோயாளிகள் அரசு மருத்துவமனை நோக்கியே படையெடுக்கின்றனர்.
இதனால், சேலம் அரசு மருத்துவமனையில் ஒரு படுக்கைக்கு இரண்டு, மூன்று நோயாளிகள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அப்படியும் படுக்கைக்கு தட்டுப்பாடு தொடர்கிறது. இதனால், நோயாளிகள் தரையில் அமர்ந்தும், படுத்தவாறும் சிகிச்சை பெற்று வரும் அவலம் ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் ஆக்சிஜன் படுக்கைகள் தட்டுப்பாட்டை போக்கும் வகையில், இரும்பாலையில் 500 ஆக்சிஜன் படுக்கைகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையிலும், அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகள் தரையில் படுத்து சிகிச்சை பெறும் நிலை நீடிக்கிறது. இதனை போக்க தமிழக அரசு தனிகவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.