சேலம்: வீட்டில் மது பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் விற்றவர் கைது
சேலத்தில், வீட்டில் பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்தவரை, போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில், கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் தனியார் மது விற்பனை கூடங்கள், முழுவதுமாக மூடப்பட்டுள்ளன.
இதனை பயன்படுத்தி ஒருசிலர், வெளிமாநிலங்களில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து, தமிழகத்தில் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாக, மாநகர காவல் உதவி ஆணையாளர் ஆனந்தகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் நடத்திய சோதனையில் சின்னத்திருப்பதி பகுதியை சேர்ந்த ஹரிகரசுதன் ( வயது 45) என்பவரது வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, காவல்துறையினர் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 117 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்து சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.