காலை முதல் டாஸ்மாக்கில் நீண்ட வரிசை..!
தமிழகத்தில் வரும் திங்கள்கிழமை முதல் 2 வாரத்திற்கு முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட உள்ள நிலையில் சேலத்தில் டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் கூட்டம் அலைமோதியது.;
தமிழகத்தில் நோய் தடுப்பு நடவடிக்கையாக டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரம் படிப்படியாக குறைக்கப்பட்டு, தற்சமயம் காலை 8 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை என நான்கு மணி நேரம் மட்டுமே செயல்பட்டு வருகிறது. இதனால் சேலத்தில் மது விற்பனை 15 சதவிகிதம் வரை குறைந்தது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் வரும் திங்கட்கிழமை முதல் இரண்டு வாரத்திற்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் செயல்படாது என தமிழக அரசு அறிவித்ததை அடுத்து சேலம் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் அதிக அளவில் குவிந்தனர்.
மேலும் இரண்டு வாரத்திற்கு தேவையான மதுபாட்டில்களை சாக்குப் பைகளில் வாங்கி சென்றனர். டாஸ்மாக் கடைகளில் குவிந்த மது பிரியர்கள் சமூக இடைவெளியை மறந்து ஒருவருக்கொருவர் முண்டியடித்து மதுபாட்டில்களை வாங்கிச் சென்றது மேலும் நோய்தொற்று பரவலை அதிகரிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்காணிக்கவோ, கட்டுப்படுத்தவோ எவ்வித அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் இருந்தது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.