சேலம் மாவட்டத்தில் பேருந்து சேவைகள் மீண்டும் தொடக்கம் - களை கட்டிய பஸ் நிலையங்கள்

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வந்ததையடுத்து சேலத்தில் இரண்டு மாதங்களுக்கு பிறகு மீண்டும் பேருந்து சேவை தொடங்கியுள்ளது.

Update: 2021-07-05 05:00 GMT

சேலத்தில் 2 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பேருந்து சேவை தொடங்கி உள்ளதை அடுத்து, சேலம் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் அணிவகுத்து நிற்கின்றன.

தமிழகத்தில் நோய் தடுப்பு நடவடிக்கையாக கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. சேலம், நாமக்கல் உள்ளிட்ட நோய் பாதிப்பு அதிகம் காணப்பட்ட 11 மாவட்டங்களை தவிர்த்து,  இதர மாவட்டங்களில் கடந்த 2 வாரமாக பேருந்து சேவை செயல்பட்டது.

இந்நிலையில்,  தமிழகம் முழுவதும் இன்றுமுதல் பொது போக்குவரத்துக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, சேலம் மாவட்டத்தில் இரண்டு மாதங்களுக்கு பிறகு இன்று மீண்டும் பேருந்து சேவை தொடங்கியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1,047 பேருந்துகளில் 65% பேருந்துகள் மட்டும் தற்போது இயக்கப்படுகின்றன. இதில் 302 நகர பேருந்துகள், 406 புறநகர் பேருந்துகள்,  50 சதவீத பயணிகளுடன் தற்போது இயக்கப்பட்டு வருகிறது. 35 சதவிகித பேருந்துகள் இயக்கப்படவில்லை. தொடர்ந்து பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல், ஓமலூர், ஆத்தூர், கெங்கவல்லி உள்ளிட்ட மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் அரசு பஸ் சேவைகள் தொடங்கியுள்ளன. மாவட்டத்தில் உள்ள முக்கிய ஆலயங்களிலும் கடும் கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 

Tags:    

Similar News