கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வீடுகள்தோறும் கணக்கெடுப்பு..!
சேலம் மாநகராட்சி பகுதியில் சளி காய்ச்சல் உள்ளதா என வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணி தீவிரம்.
சேலம் மாவட்டத்தில் கொரனோவின் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில், சேலம் மாநகராட்சி பகுதியில் இதுவரை இரண்டாம் கட்ட அலையில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மாவட்டம் முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் நகராட்சி ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வீட்டிலுள்ளவர்கள் மொத்த எண்ணிக்கை எத்தனை பேர் அதில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் யாருக்கேனும் சளி காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டுள்ளனரா? ஏதாவது சிகிச்சை எடுத்துக் கொள்ளப்பட்டதா? என்பது குறித்த பல்வேறு கேள்விகளை கேட்டு அவற்றை பதிவு செய்துவருகின்றனர். சேலம் குகை லைன் மேன் நெத்திமேடு கருங்கல்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற கணக்கெடுப்பு பணிகளில் 50 மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் வீடு வீடாகச் சென்று காய்ச்சல் சளி குறித்து கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இது குறித்து மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் கூறும் போது, சேலம் மாநகராட்சியில் தொற்று சதவீதம் அதிகரித்து வருவதால் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றும், இதில் காய்ச்சல் சளி அறிகுறி உள்ளவர்கள் சளி பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரானா தடுப்பூசி போட்டுக்கொள்ள பரிந்துரை செய்து வருவதாகவும் தெரிவித்தனர். எனவே வீடு தேடி வரும் மாநகராட்சி ஊழியர்களுக்கு பொதுமக்கள் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து உரிய ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.