சேலத்தில் திரையரங்குகளை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தும் பணி தீவிரம்

நாளை முதல் நிலையான வழிகாட்டுதல்களை பின்பற்றி 50 % பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது

Update: 2021-08-22 07:15 GMT

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து திரையரங்குகள் முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் 

நான்கு மாதங்களுக்குப் பிறகு திரையரங்குகள் திறக்க அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளதை அடுத்து சேலத்தில்  திரையரங்குகளை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது 

கொரோனா 2வது அலை பரவல் அதிகமானதைத் தொடர்ந்து, மே மாதம் தொடக்கத்தில் இருந்து தமிழ்நாட்டில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. அதற்கு முன்னரே திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டன. தமிழக அரசின் தீவிர நடவடிக்கையால் தொற்று நோய் பாதிப்பு குறைந்ததை அடுத்து, தமிழகம் முழுவதும் அடுத்தடுத்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் திரையரங்குகள் திறக்க அனுமதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 3 மாதங்களாக அனுமதி வழங்கப்படவில்லை.

திரையரங்குகளை விரைந்து திறக்க வேண்டுமென திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில், நாளை(ஆக .23) முதல் தமிழகத்தில் நிலையான வழிகாட்டுதல்களை பின்பற்றி, 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்க, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.  திரையரங்க பணியாளர்கள் அனைவரும் கட்டாயமாக தடுப்பூசி செலுத்தி இருப்பதை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது. 



கொரோனா இரண்டாம் அலை காரணமாக ஏப்ரல் மாதம் இறுதியில் மூடப்பட்ட திரையரங்குகளை நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் திறக்க அரசு அனுமதி வழங்கி இருப்பதால், அதன் உரிமையாளர்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து திரையரங்குகள் முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.புதிய திரைப்படங்கள் எதுவும் இல்லாததால் திரையில் திரையிட முடியாத சூழ்நிலை உள்ளதால், எந்த படங்களைத் திரையிடுவது என்ற குழப்பத்தில் உள்ளதாகவும்,  ஒன்று கூடி ஆலோசித்து முடிவெடுக்க உள்ளதாக திரையரங்க உரிமையாளர்கள்  தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News