கனமழையால் மூழ்கிய தரைப்பாலம்: கண்டுகொள்ளாத மாநகராட்சியால் பொதுமக்கள் அவதி
கனமழை காரணமாக செங்கல் அணை நிரம்பியதால் தரைப்பாலம் மூழ்கி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.;
செங்கல் அணையிலிருந்து வெளியேறும் நீரால் மூழ்கிய தரைப்பாலம்.
சேலம் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட செங்கல் அணை பகுதியில், சுமார் 400 குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஏற்காட்டில் அதிக அளவில் மழை பெய்யும்போது இந்தப் பகுதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவது வழக்கம். அந்த தண்ணீரை சேமித்து விவசாயத்திற்கு பயன்படுத்தும் வகையில் கடந்த 1837 ஆம் ஆண்டு செங்கல் அணை கட்டப்பட்டது.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக ஏற்காடு சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், தற்போது செங்கல் அணையில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. அணையில் இருந்து ஆர்ப்பரித்து செல்லும் தண்ணீர் அங்குள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்வதால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்தப் பகுதியில் மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கடந்த 25 ஆண்டு காலமாக அரசுக்கு கோரிக்கை வைத்த வண்ணமே உள்ளனர். ஆனால் மாநகராட்சி எல்லையில் இப்பகுதி இருந்தாலும் அரசால் கண்டுகொள்ளப்படாத இடமாகவே இன்றளவிலும் நீடித்து வருகிறது.